ஒவ்வொருவருக்கும் வாழ்கையில் நிலையான மகிழ்ச்சியே பிரதான இலக்கு. அதுவே பிறப்பின் நோக்கம். அந்த மகிழ்ச்சியை அடைய பாதைகள், வழிமுறைகள், நோக்கங்கள், செயல்கள் வேறாக இருக்கலாம், ஆனால் இலக்கு மகிழ்ச்சியாக இருப்பது. இந்த தேடலில் நிலையான மகிழ்ச்சியை அடைந்தவர்கள் சிலரே. அவர்கள் காட்டும் பாதை மகிழ்ச்சி என்பது வெளிப்புற காரணங்களால் வருவது அல்ல, அகத்தை செம்மையாக வைத்திருப்பதன் மூலம் வரும் உணர்வு நிலையே என்கின்றனர்.
பூட்டான் நாடு மற்றைய நாடுகளை விட சிறப்புமிக்கது, ஏனென்றால் அவர்களது நாட்டின் வளர்ச்சியை மொத்த மக்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை கொண்டு அளவிடுவதில் அரசு கவனம் செலுத்துகிறது. மற்றைய நாடுகளோ ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி, விற்பனை, அந்நிய செலவாணி போன்ற பொருளாதார கணக்கீடுகளில் வளர்ச்சியை பார்க்கிறது. அங்கே மனிதர்களை இரண்டாம் பட்சம் ஆகிவிடுகின்றனர். இயற்கை வளங்களோ மூலபொருட்களாக பார்க்கப்படும் நிலைக்கு சென்று விடுகிறது. கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் சமரசம் அடைந்து விடுகிறோம். நேர்மாறாக பூட்டான் நாடு வாழ்விற்கு தேவையான வசதிகளை பெருக்கி கொண்டும், அதை உபயோகிப்பதில் அளவு காத்தும் வருகின்றது. நிலையான சமூக பொருளாதார வளர்ச்சி, சுற்றுசூழல் பாதுகாப்பு, சுற்றுசூழலின் இயற்கை தன்மையை நிலைப்படுத்துவதில் உள்ள அக்கறை, கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் நல்ல அரசு தான் அங்கே மிளிர்கிறது.
நல்ல ஆரோக்கியமிக்க மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்கி உள்ள பூட்டான் நாடு இதை கொண்டு மொத்த நாட்டின் மகிழ்ச்சியின் குறியீட்டை கணக்கெடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அங்கே வாழும் மக்களும் மிகுந்த பண்பாட்டின் வழியும், ஆன்மீக உணர்வையும் அடிப்படையாக கொண்டவர்கள். அவர்களும் அரசிற்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்குவதால் தான் இது சாத்தியம்.
பூட்டான் நாட்டில் வாழும் புத்த துறவியான ரின்போச்சே வாழ்க்கையை நிறைவாக வாழ்வதற்கு நான்கு தூண்கள் நாம் பண்பாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றார். அவை
1. அன்பு
2. கருணை
3. பற்றற்ற நிலை
4. கர்மம்.
அன்பு செய்வதையே நேசிக்க வேண்டும். அதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். அதுவே மகிழ்ச்சியை உற்பத்தி செய்யும் முதல் படியாகும். அன்பு செய்வது என்பது ஒருவரை மட்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தாது அது நம்மை சுற்றியுள்ளர்வர்களிடம் பரவும். அன்பு பாராட்டுதல், அல்லது வெளிபடுத்துதலில் முதன்மையானது நம்மை நாமே நேசிப்பது. அந்த வெளிப்பாடு செயல்கள் தான் உடலை பேணிகாப்பது, நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் உழைப்பு, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை மனப்பான்மை, நற்குணங்கள் ஆகியவை ஆகும். அதன் மூலம் அந்த அன்பு பிறருக்கு பரவ துவங்கும்.
கருணை என்கிற பண்பானது நம்மை சுற்றியுள்ள சமுகத்தை சார்ந்தோ அல்லது வளர்ப்பின் போது கற்றுகொள்வதிலே அடங்கிறது. பூட்டான் போன்ற நாடுகளில் ஆன்ம உணர்வு பெற்ற புத்த கொள்கையை அதிகம் பின்தொடர்பவர்கள் தான் அங்கே வாழும் மக்கள். இயல்பாகவே பண்பாட்டுடன் பிறருக்கு கருணை கொண்டு உதவும் பண்பு அங்கே அனைவருக்கும் உள்ளது. அங்கே ஒரு சிக்கலான சூழல் சமூகத்தில் தோன்றினால் முதலில் அவர்கள் தங்களால் அந்த சமூகத்திற்கு தான் என்ன செய்ய முடியும் என்பதை ஒவ்வொருவரும் யோசிக்கின்றனர். அதுதான் கருணை வாழும் உள்ளம்.
புத்தகொள்கையில் எதுவும் நிலையற்றது என்பதே அதன் ஆணிவேர். ஏதேனும் ஒரு கடிமான சூழல் நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போகலாம், அதற்காக நாம் உடனே உடைந்து, மனம் அழுத்தும் அடைந்துவிட தேவையில்லை. ஏனென்றால் எந்த சூழலும் நிலையற்றது என்பதை உணர்ந்து ஏற்றுகொண்டால் அங்கே மாற்றத்திற்கான சிந்தனை உருவாகும், நம்பிக்கை பிறக்கும். இந்த உண்மைதான் நம் வாழ்க்கையின் ஒளியாகிறது. ஏதுவும் கடைசி வரை நம்மிடம் வர போது இல்லை என்ற உணர்வு நம் கையில் எது இப்போது உள்ளதோ அதை மகிழ்ச்சியுடன் கொண்டு செயல்களில் ஆக்கத்தை வெளிப்படுத்த உதவும். அங்கே முன்னேற்றம், மகிழ்ச்சி நிச்சியம்.
கர்மத்தை மக்கள் இன்று முழுவதுமாக தவறாக புரிந்து கொண்டு உள்ளனர். அதனால் குழப்பம், பதட்டம் அதிகமாகிறது. நாம் என்ன நினைக்கின்றோம் என்றால் ஒரு தவறு செய்தால் நமக்கு ஏதோ தவறு நடைபெறும் அது இந்த இயற்கையானது பழிவாங்கும் குணமுடைய செயலாக பார்க்கப்படுகிறது. கர்மம் செயல், சூழல்,விளைவுகளோடு தொடர்புடையது. முதலில் நாம் தேர்ந்தெடுக்கும் விருப்பங்கள், செயல்கள் யாவும் இவ்வுலகில் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் விதைதற்கு ஏற்ற பலனை எதிர்பார்க்கும் மனநிலை வருவோம். அங்கே தான் ஏற்றுகொள்ளும் திறன் வளரும். மகிழ்ச்சி, அமைதி நிலைக்கும். மாமரத்தின் விதையை விதைத்து ஆப்பிள் பழத்தை எதிர்பார்க்கக்கூடாது. கர்மத்தின் அடிப்படையை நாம் உணர்ந்து விட்டால் நமது விருப்பங்கள், செயல்கள் ஒரு ஒழுங்கமைப்போடு, யாருக்கும் துன்பம் தராத விளைவுகளாக மலரும், அது உங்கள் வாழ்வை நிறைவுடையதாக்கும்.
ஒரு நாட்டின் பிரஜைகளுக்கு ஒற்றுமைமிக்க நன்றியுணர்வும், நம்மில் கூட்டாக உள்ள சமூகத்தின் நலம் மீது அக்கறையும், தேசிய பக்தியும் தேவை அது பிரச்சினைகளற்ற அல்லது அவற்றை விரைவாக தீர்வு கண்டு அமைதி நிலைக்கு எடுத்து செல்லக்கூடிய சூழலை உருவாக்கும். எல்லையற்ற மகிழ்ச்சி நிலை பெறும். நடைமுறை சாத்தியங்களோடு முன் நடைபெற்ற குறைபாடுகளை நிகழ காலத்தில் சமரசம் செய்து கொண்டு எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். நாம் வாழும் இடம் அமைதி பூங்காவாக பூத்துக்குலுங்கும்.