வாய்ப்புகளை வீணடிக்காதீர்கள்!

கிராமத்திலேயே புத்திசாலியான ஒரு விவசாயிக்கு, அழகிய மகள் இருந்தாள். அந்த கிராமத்து மருத்துவமனையில் பணிபுரிய வந்த நகரத்து இளைஞன், அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். விவசாயியிடம் போய் முறைப்படி பெண் கேட்டான்.

விவசாயி சிரித்தபடி, “இந்த வயதில் இயல்பாக எழும் ஈர்ப்பு இது. என் மகளைவிட அழகான பெண்ணைப் பார்க்கும்போது உங்கள் மனம் மாறிவிடும். இப்போது இதுபற்றிப் பேச வேண்டாம்” என்றார். ஆனால், அந்த இளைஞன் தன் முடிவில் உறுதியாக இருந்தான். விவசாயி யோசித்தார். ”சரி, உங்களுக்கு ஒரு சோதனை வைக்கிறேன். அதில் நீங்கள் ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் மனம் மாற மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படும். அதன்பிறகு என் மகளைத் திருமணம் செய்து வைக்கிறேன்” என்றார்.

இளைஞன் அந்த சோதனைக்குத் தயாரானான், விவசாயி தன் தொழுவத்திலிருந்து மூன்று மாடுகளை அவிழ்த்துவிடுவார். அதில் ஏதாவது ஒரு மாட்டின் வாலைப் பிடித்து, அதன் முதுகில் ஏறி அமர வேண்டும் என்பதுதான் சோதனை.

விவசாயி முதல் மாட்டை அவிழ்த்துவிட்டார். நீண்ட கொம்புகளோடு இருந்த அதைப் பார்க்கவே இளைஞனுக்கு மிரட்சியாக இருந்தது. ‘சரி. இன்னும் இரண்டு மாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று அதை அமைதியாக விட்டுவிட்டான். சில நிமிடங்களில் இரண்டாவது மாடு வந்தது. முதலில் வந்த மாட்டைவிட இரண்டு மடங்கு பிரமாண்டமாக இருந்தது. இவ்வளவு பெரிய காளையை அவன் பார்த்ததே இல்லை, மூன்றாவதாக வரும் மாடு எப்படியும் இதைவிடச் சிறியதாகவே இருக்கும். அதை வசப்படுத்தலாம்’ என ஒதுங்கி நின்றான்.

மூன்றாவது மாடு கொஞ்ச நேரத்தில் வந்தது. அது கன்றுக்குட்டி போல சிறியதாக, சாதுவாக நடந்து வந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. ‘விவசாயி தன் மகளை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு மாட்டை மூன்றாவதாக அவிழ்த்துவிட்டிருக்கிறார்’ என்று நினைத்தான். அருகில் வந்ததும் அதன் வாலைப் பிடித்து முதுகில் ஏற முயன்றான். ஆனால், அந்த மாட்டுக்கு வாலே இல்லை!

வாய்ப்புகளும் இப்படித்தான். எல்லோருமே ஏராளமான வாய்ப்புகளால் சூழப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஆர்வமாகத் தேடுபவர்களின் கண்களுக்கு மட்டுமே அவை தெரியும். வாழ்க்கையில், வேலையில், தொழிலில் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு உதவும் படிக்கட்டுகள் வாய்ப்புகள்தான். ஆனால், நிறைய பேர் அவற்றைத் தவறவிடுகிறார்கள். வாய்ப்புகளை இழப்பதற்குக் காரணங்கள் பல…

நேரத்தை வீணடிப்பது:

தினசரி எவ்வளவு நேரம் உருப்படியான செயல்களைச் செய்கிறீர்கள், எவ்வளவு நேரம் கேளிக்கைகளில் கழிக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். கேளிக்கைகள் தவறில்லை. கடினமான உழைப்புக்குப் பிறகு உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தர அவை நிச்சயம் தேவை. ஆனால், அதிலேயே மூழ்கிவிடக் கூடாது. அதில் நீண்ட நேரத்தை வீணடிக்கும்போது, வாய்ப்பு உங்களைத் தாண்டிப் போய்க்கொண்டே இருக்கும். உங்களால் அதைப் பார்க்க முடியாது.

தவறான மனிதர்களுடன் இருப்பது:

உங்களுடன் அதிக நேரம் இருக்கும் நபர்கள் எப்படிப்பட்டவர்களோ, அவர்களுடைய குணங்களின் கலவையாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள். எதிர்மறையாகப் பேசுபவர்களும், வெற்றுக் கேளிக்கைகளில் ஈடுபடுபவர்களும் கூடவே இருந்தால், உயர்ந்த இலக்குகளை உங்களால் அடைய முடியாது. உங்களுடன் இருப்பவர்களை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். அவர்களால் உங்களை உருவாக்கவும் முடியும்; நொறுக்கவும் முடியும்.

கவனம் சிதறுவது:

புதிதாக ஒரு தொழிலோ, வேலையோ செய்ய ஆரம்பிக்கும் பலர் செய்யும் முக்கியமான தவறு இது. தங்களின் முக்கியமான இலக்கு எது என்பதை அறிந்துகொண்டு, அதைச் சார்ந்த வாய்ப்புகளையே தேட வேண்டும். ஆனால், இவர்கள் தொடர்பில்லாத பல திசைகளில் சென்று, தேவையில்லாமல் சக்தியையும் நேரத்தையும் வீணடிப்பார்கள். மனம் மாறுவதும், கவனம் சிதறுவதுமாக இருந்தால், ஆரம்பித்த இடத்திலேயே நின்றுகொண்டிருக்க வேண்டியதுதான்.

ரிஸ்க் எடுக்காமல் இருப்பது:

பல நல்ல வாய்ப்புகள் ரிஸ்க் என்ற முகமூடியை அணிந்துகொண்டு வரும். வழக்கமான செயல்களை, வழக்கமாக எல்லோரும் செய்யும் முறைப்படி நீங்களும் செய்துவிட்டு, வழக்கத்துக்கு மாறான விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. மற்றவர்களைப் போல சிந்திக்காமல், வித்தியாசமாக சிந்தித்து செயலில் இறங்குபவர்களே நிறைய வாய்ப்புகளை அடைகிறார்கள்.

அச்சம் கொள்வது:

தெரியாத ஒரு விஷயத்தைச் செய்வதற்கு பயம், தோல்வி அடைந்துவிடுவோமோ என்று பயம், இழப்புகளைத் தாங்கமுடியாதோ என்ற பயம். இப்படி பயத்துக்கு மேல் பயம் சேர்ந்து, எந்த வாய்ப்பையும் அடையவிடாமல் தடுக்கிறது. பயத்துக்கு அடிபணியும் மனிதர்கள், வெற்றியின் ருசியை அனுபவிக்கத் தவறுகிறார்கள். பயத்தில் எதுவுமே செய்யாமல் இருப்பவர்களுக்கு எந்த அனுபவமும் கிடைப்பதில்லை.

குழப்பம் அடைவது:

சில சமயங்களில், இந்த வாய்ப்பை ஏற்பதா என்ற குழப்பத்தில் ஒன்றுமே செய்யாமல் இருந்துவிடுகிறார்கள் பலர். அதுபோன்ற நேரங்களில், மனதுக்குள் சில கேள்விகளை எழுப்பிக்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினால், இதன் விளைவு என்னவாக இருக்கும்? ஒருவேளை இதில் தோற்க நேர்ந்தால், எனக்கு ஏற்படும் இழப்பு என்ன? இதில் ஜெயித்துவிட்டால் நான் எங்கு இருப்பேன்?’ என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டும். அந்த விடைகள் உங்களை செயல்பட வைக்கும்.

நம்பிக்கை இழப்பது:

நம்பிக்கையற்ற மனிதர்களே ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார்கள். ரிஸ்க் எடுப்பதற்கு பெரும் துணிச்சல் தேவை. தோல்வியே விளைவாக இருந்தாலும், அதைத் துணிச்சலோடு அடைபவர்கள் சிறந்த அனுபவத்தைப் பெறுகிறார்கள். அடுத்த முறை இன்னும் தைரியமாக முடிவெடுத்து, வெற்றியை அடைவதற்கு இது உதவுகிறது.

சமூக அழுத்தம்:

இதைச் செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, இந்த வாய்ப்பில் தோற்றால் அடுத்தவர்கள் கிண்டல் செய்வார்களோ… இப்படியெல்லாம் சமூக அழுத்தங்களுக்கு பயந்து பலரும் வாய்ப்புகளைத் தட்டிக் கழிக்கிறார்கள். அடுத்தவர்களின் கருத்துகளுக்கு பயப்படும் மனிதர்கள். வாழ்வில் எதையுமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

தவற விட்ட வாய்ப்புகள் எவை, கடந்த காலத்தில் செய்த தவறுகள் என்னென்ன என்றெல்லாம் அலசிப் பார்ப்பதே முன்னேற்றத்துக்கான வழி. ‘இதைவிட சிறப்பாக என்ன செய்திருக்கலாம்” என்று தேடுபவர்களே வெற்றிக்கான பாதையில் நடைபோடுகிறார்கள்.

Thanks For Reading


Share via social media

Leave a comment