மனிதனிடம் கடவுள் இருப்பதோடு, கடவுளை அறிந்துகொள்ளும் பெருமையும் இருக்கிறது. இத்தகைய பெருமை அவனிடம் இருக்க, அதனை மறந்து தன் உடல் அளவிலே எல்லை கட்டிக் கொண்டிருக்கிறான். இந்நிலையிலேயிருந்து விடுதலை பெற வேண்டுமானால், அவன் தன் உயிரைப் பற்றிய அறிவு பெற வேண்டும். உயிரின் தன்மை என்ன? அதன் மூலம் என்ன? பரம்பொருளே, அதன் எழுச்சி நிலையே, இங்கு உயிராக இருக்கிறது. இன்று இந்த உடலில் உயிர் இருந்தாலும் பரம்பொருளின் தொடர்பு அறுபடாமல் தொடர்ந்து இருந்து கொண்டுள்ளது.
மனிதன் அறிவிலே முன்னேறிவர வேண்டும் என்பதுதான் பிறவியின் நோக்கம். இதுதான் இயற்கையினுடைய இயல்பு. இது கெடக் கூடாது. இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்கிறபோது, தனி மனிதப் பாதுகாப்பு என்பது அங்குதான் உண்டாகிறது. உலகம் முழுவதிலும், மேல்நாட்டிலேகூட பல இடங்களில் என்னிடம் கேட்பதுண்டு, ‘சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று.
“தனி மனிதனுடைய சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள், கதந்திரத்தைக் காப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கிறபோது, கட்டுப்பாட்டினால்தான் சுதந்திரம் உண்டாகும், பிறர் கதந்திரத்தை அழித்துவிடக் கூடாது என்ற பேருணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் வர வேண்டும். அப்படி வந்து அவனுடைய செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளும்போது தான் சுதந்திரம் எல்லோருக்கும் கிடைக்கும். மாறாக, விரும்பும் காரியத்தை எல்லாம் தங்கு தடையின்றிச் செய்வதற்கு ஒரு வாய்ப்புதான் சுதந்திரம் என்று வைத்துக்கொள்வது தவறான கருத்தாகும்” என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. ஆகவே, எல்லோருக்கும் சுதந்திரம் உண்மையாக வேண்டுமானால், பிறருடைய சுதந்திரத்தை நாம் காக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய கட்டுப்பாடுகளில்தான் எல்லோருடைய சுதந்திரமும் காக்கப்படும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.
தாவரங்கள் தவிர மற்ற உயிரினங்கள், வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம், விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமம் அடைந்துள்ளது. இதனால், ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள எல்லா உயிரினங்களின் தேவையுணர்வு, செயல்முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபுவழிப் பதிவுகளாக மனிதனிடம் உள்ளது. விலங்குகளின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல்பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம்.
அவை :
பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல்,
மற்ற உயிர்களின் உடலை பறித்து உண்ணுதல்,
மற்ற உயிர்களின் வாழும் கதந்திரத்தைத் தன் அதிகாரத்தாலோ அல்லது இன்பத்துக்காகவோ பறித்தல்,
இந்த மூன்று செயல்களும் ஐந்தறிவு வரையில் பரிணாமம் அடைந்த விலங்கினத்தைப் பொறுத்தவரை குற்றம் இல்லை. ஏனெனில், அவற்றுக்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால், உழைத்துப் பொருள் ஈட்டி, அதை மற்றவர்களோடு பகிர்ந்து உண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள்தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணம், விலங்கினப் பதிவுகளை நீக்கி, சிக்கலின்றி வாழ்வோம்.
சூரிய ஒளியினால் சூடு பெற்று, கடலிலிருந்து ஆவியாக மாறி மேகமாகி, அது குளிர்ந்து எந்த இடத்தில் மழையாகப் பெய்தாலும், அந்த நீர் தனது பிறப்பிடமாகிய கடலை நாடியே ஓடுகிறது. அதுபோல, இறைநிலையிலிருந்து புறப்பட்டு, பல தலைமுறைகளாக ஜீவன்களில் இயங்கி, மனிதனிடம் இறுதியாக வந்து இயங்கிக் கொண்டிருக்கும் சிற்றறிவு, முற்றறிவான இறைவனை நாடியே அலைகின்றது. அத்தகைய வளர்ச்சி நிலையில் உடல் தேவைக்கான பொருள், புலன் இன்பம் இவற்றில் நம் சிற்றறிவு ஈடுபடுகிறது.
இங்குதான் அறிவானது தான் போக வேண்டிய இடத்தை மறந்து, அடுத்தடுத்து தொடர்பு கொண்ட பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றை நாடுகிறது. பொருள்களும் இன்பமும் உழைக்காமலே கிடைக்கக்கூடிய வழிகளாகிய அதிகாரம், புகழ் ஆகியவற்றின்மீது ஆசை கொள்கிறது. எவ்வளவுதான் பொருளோ, புலன் இன்பமோ, புகழோ, அதிகாரமோ அமைந்தாலும், இன்னும் வேண்டும், இன்னும் உயர்வாக வேண்டும்’ என்ற உணர்ச்சிமயமான மன அலையில் இயங்குகிறது.
இதனால் அளவுமீறியும், முறைமாறியும், ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங்களையும் பயன்படுத்துகிறார்கள். அவை பழுதுபட்டு பல குறைபாடுகள் வருகின்றன. உடல் துன்பம், மன அமைதியின்மை, செயல் திறமிழத்தல், இதனால் சமுதாயத்தில் மதிப்பிழத்தல் போன்ற குறைபாடுகளோடு வருந்திக்கொண்டே இருக்க வேண்டியதாகிறது. மெய்யுணர்வு பெற்ற குருவழியால் அறம் பயின்று. இறைநிலை விளக்கமும் பெற்றால், மன ஒட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும். துன்பத் தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும். வேறு எந்த வழியும் மனிதன் உணர்வதற்கு இல்லை.
உடலுக்குள் இருக்கும் உயிர், உணர்ச்சியின் அனுபோகத்தில் உடல் வரைக்கும் எல்லை கட்டிக்கொண்டு இருக்கிறது. என்றாலும், தன் முழுமையை உணர்ந்து கொண்டால், தன் மூலத்தை அறிந்து கொண்டால். எல்லாவற்றிலும் தன்னையே பார்க்கின்ற ஒரு தன்மை வந்து விடும். சிறுமை, பெருமை, தன்முனைப்பு எல்லாம் நீங்கி விடும். இந்த நிலையில் பிறரை மதிக்கவும். ஆதரிக்கவும், பரிவு காட்டவும், மேல்நிலைக்குக் கொண்டு வரவுமான பொறுப்புணர்ச்சியைப் பெறுகிறான்.